ரஹ்மான் இசையமைத்த ஈரான் திரைப்படம், முகமத் - த மெசஞ்சர் ஆஃப் காட் திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என மும்பையைச் சேர்ந்த சன்னி முஸ்லீம் அமைப்பு ஒன்று உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
முகமது நபியின் பெயரில் வெளியாகியிருக்கும் படத்தை மக்கள் விமர்சித்தால் அது நபிகளை இழிவுசெய்வதாக அமைந்துவிடும். ஆகவே இந்தப் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்பது அவர்களின் வாதம்.
இத்தனைக்கும் கடுமையான இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றும் ஈரான் அரசின் நிதியுதவியில் தயாரிக்கப்பட்ட படம் இது.
படத்தை இயக்கிய மஜித் மஜிதியும், இசையமைத்த ரஹ்மானும், இந்தப் படத்தில் பணியாற்றியதன் மூலம் இஸ்லாமிய சட்டங்களை மீறிவிட்டதாகவும், அவர் மீண்டும் திருமணத்தை நடத்தி தங்களை புனிதப்படுத்த வேண்டும் எனவும் அந்த அமைப்பு ஃபத்வா விதித்தது. அதற்கு ரஹ்மான் பதிலளித்துள்ளார்.
"நான் அந்த படத்தை தயாரிக்கவோ அல்லது இயக்கவோ இல்லை. வெறும் இசை மட்டும் தான் அமைத்துள்ளேன். இந்த படத்தில் வேலை செய்தது மூலம் எனக்கு கிடைத்த ஆன்மீக அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள விருப்பம் இல்லை.
நான் இந்த படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்பது கடவுளின் முடிவு. இது தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.