திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பேசுகையில், நானும் பேராசிரியரும் இன்னும் பத்தாண்டோ, பதினைந்து ஆண்டோ தான் இருப்போம் என உருக்கம் காட்டி பேசினார்.
திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார் விருது, சிவசுப்ரமணியத்திற்கும், அண்ணா விருது பெங்களூரு தேவராசனுக்கும், பாவேந்தர் விருது திருமதி பவானி ராஜேந்திரனுக்கும், கலைஞர் விருது கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கும் வழங்கப்பட்டது. அப்போது, திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:-
இன்றைய தினம் நானும் 90ஐ தாண்டி யிருக்கிறேன், பேராசிரியரும் 90ஐ தாண்டியிருக்கிறார். நானும், பேராசிரியரும் இருக்கிற வரை - இன்னும் பத்தாண்டோ, பதினைந்து ஆண்டோ...உங்களை யெல்லாம் எதிரே பார்த்துக் கொண்டு நானும் பேராசிரியரும் இங்கே அமர்ந்து எதை உங்களிடம் பேசுவது என்று புரியாத ஒரு நிலையில் இந்த மேடையிலே அமர்ந்திருக்கிறோம்.
நானும் பேராசிரியரும் இந்த மேடையிலே அமர்ந்திருக்கிறோம் என்றால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே படித்துக் கொண்டிருந்த மாணவனாக இருந்த அன்பழகன் அவர்களை, திருவாரூரில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய விழாவுக்கு அழைத்து வந்து, அண்ணாவை பேச அழைத்தவுடன், அவர் எழுந்து நான் ஒரு தம்பியை அழைத்து வந்திருக்கிறேன், அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்திருக்கின்ற ஒரு மாணவத் தம்பி, அவர் முதலில் பேசுவார், அவர் பேசி முடித்த பிறகு இந்த நிகழ்ச்சி தொடருமென்று அண்ணா அறிவித்தார்.
அந்தக் காலந் தொட்டு, நான் பேராசிரியரோடு பழகிய அந்தக் காலந்தொட்டு, ஏறத்தாழ அவருக்கும் எனக்கும் ஒரே வயது. இன்றையதினம் நானும் 90ஐ தாண்டி யிருக்கிறேன், பேராசிரியரும் 90ஐ தாண்டியிருக்கிறார். நாங்கள் இருவரும் 90ஐ தாண்டியிருக்கின்ற இந்த நேரத்தில் எங்களுடைய நம்பிக்கை யெல்லாம் நாங்கள் நூறைத் தாண்டுவோம், நூற்றி இருபதைத் தாண்டுவோம் என்றல்ல. அப்படி நினைத்து நீங்கள் கைதட்டுவீர்களேயானால், நானோ நீங்களோ ஏமாந்து போக நேரிடும். அது அல்ல. நாங்கள் இருக்கிற வரை - இன்னும் பத்தாண்டோ, பதினைந்து ஆண்டோ பத்தாண்டே போதுமென்று நீங்கள் கருதுகிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன்.
அதுவரையில் நாங்கள் உருவாக்காமல் - உங்களுடைய உழைப்பின் மகிமையால் - அதைப் பயன்படுத்தி - அதனால் ஏற்படுகின்ற எழுச்சியும், வலிவும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான வளத்தையும், திராவிட இயக்கத்திற்கான வளர்ச்சியையும், தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்திற்கான வளர்ச்சியையும் இங்கே மேலும் மேலும் அதிகப்படுத்தி நாம் எல்லாம் பெரியாரின் பிள்ளைகள் - அண்ணாவின் தம்பிகள் என்று எண்ணிக் கொண்டால் போதாது. சொல்லிக் கொண்டால் போதாது. உள்ளபடியே இந்த இயக்கங்களை வளர்க்க பாடுபட வேண்டும் என்று உறுதியோடு கூற விரும்புகிறேன்.
விரைவில் தமிழகத்தில் சட்டம ன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எந்த புயல் வந்தாலும் அதனை திமுக தாங்கி நிற்கும். இளைஞர்கள் இருக்கும் வரை திமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்றார்.