திரையங்குகளில் தேசிய கீதத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாண்டிமகாராஜா என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
மதுரையில் உள்ள சினிமா திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன்பு தேசிய கீதம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அப்போது, சிலர் அந்த தேசிய கீதத்தை அவமரியதை செய்யும் விதமாக எழுந்து நின்று மரியாதை அளிப்பதில்லை. உட்கார்ந்தே உள்ளனர். இந்த சம்பவம் மனதிற்கு மிகுந்த வேதனையை தருகிறது.
எனவே, தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலை தடுக்க வேண்டும். இதற்காக, திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்பை உடனே தடை செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபகள், தேசிய கீதம் குறித்த வழிகாட்டுதல் தனியாக உள்ளது. அதற்கு என தனியாக விதிகள் உள்ளன. அதை யாராவது மீறுவது போல இருந்தால் மனுதாரர், அதற்குரிய அமைப்பில் புகார் அளித்து பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.