என்னுடைய சின்ன வயதில் என்னுடைய அத்தை ஒருவர் பேய் கதைகளாகச் சொல்லி பேய் பற்றிய பயத்தை ஏற்படுத்திவிட்டார். இருட்டு என்றாலே எனக்கு பயம். இருட்டில் இப்போதும் தனியாக போவதில்லை என்று ஜீ.வி.பிரகாஷ்தெரிவித்துள்ளார்.
முழுநேர நடிகராகிவிட்டார் ஜீ.வி.பிரகாஷ். அவர் முதலில் நடித்த பென்சில் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், அடுத்து நடித்த டார்லிங் வெளியாகி லாபமும் சம்பாதித்தது. அந்தப் படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீனே ஜீ.வி.பிரகாஷின், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை வாங்கியுள்ளது.
புரூஸ்லீ என்ற படத்தில் நடித்து வருகிற ஜீ.வி.பிரகாஷ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
நடிகனாக இருப்பதில் என்னென் சிரமங்கள் இருக்கிறது?
பாடுவது போலத்தான் நடிப்பதும். ஆனால், ஹீரோவாக நடிப்பது சுலபமில்லை. ஹார்ட் வொர்க் பண்ண வேண்டியிருக்கு. தினமும் எடை பார்த்து உடலை மெயின்டெய்ன் செய்ய வேண்டியிருக்கிறது. வசனத்தை மனப்பாடம் செய்து முகபாவனைகளுடன் பேச வேண்டியிருக்கிறது.
உங்களை இந்த இக்கட்டில் தள்ளியது யார்?
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்தான் காரணம். அவர்தான், நீங்க நடிக்கலாமே என்றார். அவருடைய தயாரிப்பில் என்னை நடிக்க வைப்பதாகச் சொன்னார். அதற்குள் டார்லிங் பட வாயப்பு வந்தது. இப்போது தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.
டார்லிங் பேய் படம். ஆவி பேயில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
என்னுடைய சின்ன வயதில் என்னுடைய அத்தை ஒருவர் பேய் கதைகளாகச் சொல்லி பேய் பற்றிய பயத்தை ஏற்படுத்திவிட்டார். இருட்டு என்றாலே எனக்கு பயம். இருட்டில் இப்போதும் தனியாக போவதில்லை.
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் மனிஷாவுக்கு 38 முறை முத்தம் தந்தீர்களாமே?
அப்படி சர்ச்சையை கிளப்பியது அப்படத்தின் இயக்குனர் ஆதிக். அதுவொரு நீண்ட காட்சி. இரண்டு பேரும் நடந்து வந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டபின் முத்தமிடுவதாக வரும். அதனை 38 முறை எடுத்தது உண்மைதான். ஆனால் முத்தமிடுகிற காட்சியை ஐந்துமுறைதான் எடுத்தோம்.
முத்தக் காட்சியால் வீட்டில் பிரச்சனையாமே?
அப்படி எந்தப் பிரச்சனையும் இல்லை.
எந்த மாதிரி கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்?
பக்கத்துவீட்டு பையன் போன்ற ஃபீல் வருகிற கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.
நடிப்பு, இசை... எதற்கு முதலிடம்?
இரண்டையும் நான் சமமாகவே நினைக்கிறேன்.