மதுரை மாவட்டம் மேலூரில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தங்கள் உறவினர்களுடையது என்று அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலூரில், ஒரு குழந்தை உள்ளிட்ட 4 பேரின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு எலும்புக்கூடுகள் பெண்களுடையது என்றும், குழந்தையின் மண்டை ஓடு, சின்னலம்பட்டியைச் சேர்ந்த செல்வி என்பவரின் 8 மாத பெண் குழந்தையினுடையது என்றும் , காவி துணியுடன் காணப்பட்ட எலும்புக்கூடு அதே பகுதியைச் சேர்ந்த சாமியாடி சின்ன கருப்பன் என்பவருடயது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், எலும்புக் கூடுகளின் ஆய்வு அறிக்கை இன்று (செப்.18) கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு, அந்த எலும்புக்கூடுகளின் உறவினர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படும். அதன் முடிவில், எலும்புக் கூடுகள் யாருடையது என்பது கண்டிபிடிக்கப்படும் என சகாயம் தெரிவித்துள்ளார்.
மேலும், எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்ட இடம் சுடுகாடு என்று அரசுப் பதிவேட்டில் இல்லை என்று தெரிவித்திருக்கும் சகாயம், கூடுதல் தடையம் கிடைக்கும் என, இன்னும் 10 அடி தோண்டச் சொல்லியிருக்கிறார்.
அப்பொது இன்னொரு எலும்புக் கூடும் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அந்த இடத்தில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.