சீனாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை விந்து தானம் அளிப்பவர்களுக்கு ஆப்பிள் ஐபோன் 6எஸ் செல்போன் பரிசாக வழங்கப்படும் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஐபோன் 6எஸ் விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது, பலருக்கு இந்த ஐபோனை வாங்க ஆசை இருக்கலாம். இந்நிலையில், இதை பயன்படுத்தி சீனாவின் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. விந்து தானம் செய்பவர்களுக்கு இந்த ஐபோன் பரிசாக வழங்கப்படும் என அந்த மருத்துவமனை அறிவித்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள இந்த ஐபோன் பரிசை வாங்குபவர்களுக்கு இந்த மருத்துவமனை சில நிபந்தனைகளை விதித்துள்ளது, விந்து தானம் அளிப்பவர் குறைந்தபட்சம் 165 சென்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும் எனவும். ஒரு கல்லூரி பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், குறைந்தபட்சம் 48 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து ஆறு மாதம் வரை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் விந்து தானம் அளிக்கலாம் எனவும் ஒவ்வொரு முறையும் ஒரு ஐபோன் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இப்படி வித்தியாசமான அறிவிப்பை சீனாவின் ஷாங்காயில் உள்ள ருஜின் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.