சித்தர் பாட்டி என அழைக்கப்படும் 95 வயது பாட்டியினை உயிருடன் சமாதி கட்ட முயற்சி நடப்பதாக எழுந்த புகார் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உமாதேவி எனும் பெயர் கொண்ட இவரின் குடும்பம மற்றும் அல்லது பூர்வீகம் பற்றி எந்த தகவலும் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள, ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு வந்தார். பின் அங்கேயே தங்கி விட்டார். அதோடு கையால் அடித்தும், திட்டியும் எல்லோருக்கும் அருள் வாக்கும் கூறி வந்தார். அவர் திட்டி அருள்வாக்கு கூறினால் நல்லது நடக்கும் என பக்தர்கள் நம்பினர். அத்துடன் அவர் “சித்தர் பாட்டி” என்று அப்பகுதி மக்கள் அழைத்தனர்.
இவரைப் பற்றி கேள்விப்பட்டதும், கர்நாடகம்,கேரளம் போன்ற ஊர்களிலும் இருந்தும் இவரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்.நான்கு ஆண்டுகள் அங்கிருந்த சித்தர் பாட்டியை, கரூர் மாவட்டம், வேட்டமங்கலத்தைச் சேர்ந்த அவரது பக்தர் டாக்டர் நடராஜன் என்பவர் தனது வீட்டிற்கு அழைத்து வந்து, தனது தோட்டத்தில் தங்க வைத்தார். வயதானதால் சித்தர் பாட்டியால் எழுந்து நடக்க முடியவில்லை.
இந்நிலையில், சித்தர் பாட்டியை உயிருடன் சமாதி கட்ட முயற்சி நடப்பதாக கரூர் கலெக்டர் ஜெயந்திக்கு புகார் வந்தது. அங்கு சென்று விசாரணை நடத்திய கலெக்டர், உடல் நலம் குன்றி இருந்த சித்தர் பாட்டியை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்டார். பாட்டிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாட்டிக்கு, மருத்துவமனையில் போலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இது தெரிந்து நிறைய பக்தர்கள், மருத்துவமனைக்கு சென்று பாட்டியின் காலைத்தொட்டு வணங்கிச் செல்கின்றனர். அங்குள்ள நர்சுகளும் பாட்டிக்கு பக்தர்களாக மாறிவிட்டனர்.