இந்தியாவில் 2013ம் ஆண்டில் மட்டும் 30 லட்சத்திற்கும் மேலானோர் இளம் வயதில் மரணமடைந்துள்ளனர் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
தி லான்செட் இதழ் உலகம் முழுவதும் மரணம் அடையும் இளம் வயதினர் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளின் படி, இளம் வயது இறப்பிற்கு முக்கியக் காரணிகள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், வீடுகளில் எரிக்கப்படும் திடப் பொருட்களிலிருந்து வெளிப்படும் மாசு, சுகாதாரமற்ற நீர் ஆதாரங்கள் மற்றும் புகை ஆகிய தவிர்க்க முடியா ஆபத்துகள் என்று குறிப்பிட்டுள்ளன.
இவ்வகையில் ஏற்படும் நோய்கள் இந்தியாவிலுள்ள ஆண்கள், பெண்கள் இருவருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த ஐந்து பெரிய ஆபத்துக் காரணிகளில் உயர் இரத்த அழுத்தம் 7.8 சதவீதமும், நீரிழிவு நோய் 5.2 சதவீதமும், வீடுகளில் ஏற்படும் மாசு 4.7 சதவீதமும் நம் உடலில் மொத்த ஆரோக்கியத்தையும் இழக்கச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று மதிப்பிடப்படுகிறது.
உலகில் மொத்தம் 188 நாடுகளில் 79 நாடுகள் இந்த ஆபத்தான காரணிகளின் பிடியில் இருப்பதாக தி லான்செட் இதழ் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 52 லட்சம்பேர் இளம் வயதில் இறக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 30 லட்சத்திற்கும் மேலானோர் இளம் வயதில் மரணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.