டெல்லியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் புதுடெல்லியில் டெங்கு காய்ச்சல் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 600 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து டெங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,800 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக 20 சதவிகித நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்தும் பரிசோதனைக்கு நோயாளிகளிடம் இருந்து 600 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீர்நிலைகள் மற்றும் சுகாதாரமற்ற இடத்தில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த ஒரு மாதம் வரை பள்ளி செல்லும் குழந்தைகள் முழுக்கை சட்டையும் பேண்டையும் அணிந்து வருமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.