மகன் இறந்த நாளிலேயே, அவர்களின் பெற்றோர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி குமரன் நகர், கே.வி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(48). அரசு பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். அவரின் மனைவி வளர்மதி(40). இவர்களின் ஒரே மகன் நந்தன்(22). நந்தன் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். திடீரென உடல் நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பெற்ற மகன் மரணத்தின் பிடியில் இருப்பதை அறிந்த நந்தனின் பெற்றோர்கள், அதிர்ச்சியில் மனமுடைந்தனர். பல்வேறு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையளித்தும், நந்தன் குணம் அடையவில்லை.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் நந்தன் மரணமடைந்தார். மகன் இறந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர்கள் வீட்டிற்குள்ளேயே தனிமையில் முடங்கினர். யாரிடமும் சரியாக பேசவில்லை. இப்படியே ஒரு ஆண்டு போனது. இந்நிலையில், மகன் இறந்து ஒரு ஆண்டு முடிந்ததை தொடர்ந்து, நந்தனுக்கு திதி கொடுத்தனர்.
இந்நிலையில், அவர்களின் வீட்டிற்கு வந்த உறவினர்கள், கதவை பல முறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் கொண்ட அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். நந்தனின் பெற்றோர்கள் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.
மகன் இறந்த நாளிலேயே தங்கள் உயிரை மாய்த்துகொள்ள முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தங்கள் மகனுடன் அவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவிற்கு மாலை அணிவித்திருந்தனர். மேலும், தங்களின் வீட்டை, ஆனைமலை காந்தி ஆசிரமத்திற்கு உயிலும் எழுதி வைத்திருந்தனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.