புதுடில்லியில் மந்திரியின் மனைவியை கடித்த நாயை காவல்துறை கைது செய்ய இருக்கிறார்கள்.
புதுடில்லியின் அர்விந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் முன்னாள் சட்ட மந்திரியாக இருந்தவர் சோம்நாத் பார்தி. அவர் மீது, அவரின் மனைவி போலிஸில் புகார் தெரிவித்திருந்தார்.
அதில் "சோம்நாத் என்னை கொலை செய்வதற்கு இரண்டு முறை முயற்சி செய்தார். 2013ம் ஆண்டு நான் கர்ப்பமாக இருந்த போது, அவர் வளர்க்கும் “டான்” என்ற நாயை ஏவி விட்டு என்னை கடிக்க வைத்தார்" என்று புகார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, டெல்லி போலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
டெல்லி போலிசார் தன்னை கைது செய்யக் கூடாது என்று சோம்நாத் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அந்த மனு நேற்று தள்ளுபடியானது. இதைத் தொடர்ந்து சோம்நாத்தை ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவில் கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனால் சோம்நாத் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிபார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்த வழக்கில் அவருடன் அவரின் நாயும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நாயை காவலில் வைக்கப்போவதாக டெல்லி போலிசார் கூறியுள்ளனர்.
இதற்கு சோம்நாத்தின் வக்கீல் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘நாயிடம் எப்படி விசாரணை நடத்துவீர்கள்?’’ என்று அவர் போலீசாரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு பதில் சொல்ல மறுத்த போலீசார் சட்டப்படி நாயை கைது செய்வோம் என்று கூறினார்கள்.