நாடாளுமன்றம் அனுமதித்தால் அடுத்த வருடம் முதல் இலங்கையில் மரண தண்டனையை அமல்படுத்தத் தயாரென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இன்று காலி பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அண்மையில், நாட்டின் பல பாகங்களில் சிறார்கள் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி சிறிசேனா அதனை தடுப்பதற்கு மரண தண்டனையை அமல்படுத்துமாறு மக்கள் கோரிவருவதாகத் தெரிவித்தார்.
ஆனால், மரண தண்டனையை அமல்படுத்துவதற்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறிய ஜனாதிபதி, அதனை அமல்படுத்துவதில் தனக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்று கூறினார்.
சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட மரண தண்டனை அமல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த மைத்திரிபால சிறிசேனா, மரண தண்டனையை அமல்படுத்த தனக்கு அதிகாரங்கள் இருந்தாலும் நாடாளுமன்றத்தின் அனுமதியை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் அனுமதியை வழங்கினால் அடுத்த வருடம் முதல் மரண தண்டனையை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி மைத்ரிபால் சிறிசேனா தெரிவித்தார்.
இலங்கையில் மரண தண்டனை விதிக்க சட்டத்தில் அனுமதி இருந்தாலும், 1976ஆம் ஆண்டுக்கு பின்னர் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இலங்கை குற்றவியல் சட்டத்தின்படி, குற்றவாளிக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டால் அதனை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதியின் அனுமதி அவசியம்.
ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஜனாதிபதி அதற்கான அனுமதிகளை வழங்குவதில்லை என்பதால், மரண தண்டனை விதிக்கப்படும் நபர்கள் ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்படுகின்றனர்.