தூங்கா வனம் பிரெஞ்ச் திரைப்படம், ஸ்லீப்லெஸ் நைட்டை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 38 தினங்களில் படத்தை முடித்து தற்போது படத்தின் ட்ரெய்லரையும் வெளியிட்டுள்ளனர். படம் எப்படி வந்துள்ளது? படத்தில் பங்கு பெற்றவர்களே கூறுகிறார்கள்.
காஸ்ட்யூம் டிஸைனர் கௌதமி:
ராஜ்கமல் ஃபிலிம்ஸில் மீண்டும் காஸ்ட்யூம் டிஸைனராக பணியாற்றியது மகிழ்ச்சியை தந்தது. கமலின் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏற்படி காஸ்ட்யூம் டிஸைன் செய்வது சவாலான விஷயம். என்றாலும், எந்த கதாபாத்திரத்தையும் அவர் அசால்டாக செய்துவிடுவதால் அவருக்கு காஸ்ட்யூம் செய்வது இந்தப் படத்திலும் பெரிய விஷயமாக இருக்கவில்லை.
இந்த படத்தில் வேறு ஒரு திரிஷாவை பார்க்கலாம். அவரது நடிப்பு பாராட்டும்படி அமைந்துள்ளது. அவருடைய உடை அலங்காரமும் முற்றிலும் மாறுபட்டிருக்கும்.
வசனகர்த்தா சுகா:
பாபநாசத்தை தொடர்ந்து தூங்கா வனத்துக்கு வசனம் எழுதச் சொன்ன போது எனக்கு சந்தோஷத்துக்குப் பதில் பயம்தான் வந்தது. பாலுமகேந்திரா குடும்பத்திலிருந்து வந்தவன் நான். எங்கள் குடும்பத்தின் மூத்த அண்ணாச்சி கமல் அவர்கள்.
நடிகர் பிரகாஷ்ராஜ்:
கமலுடன் பணிபுரிவது அற்புதமான தருணங்கள். நான் ஏற்கனவே அவருடன் 2 படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அவருடன் பயணம் செய்திருக்கிறேன். எனக்கும், அவருக்கும் டைரக்டர் கே.பாலசந்தர் தான் குரு. பாலசந்தரின் மறைவுக்கு பின், கமல்ஹாசனுக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது.
நடிகை த்ரிஷா:
ஷாருக்கான் முதல் எந்த நடிகரும் கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எனக்கு இரண்டாவது முறையாக கமல் சாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைதுள்ளது. பிரகாஷ்ராஜுடன் இதுவரை 45 படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு சகோதரனாக, நண்பராக, லவ்வராக எனக்கும் அவருக்குமான நட்பு தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
படத்தில் எனக்கு சவாலான வேடம். அதை கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். இந்தப் படத்துக்கு கமல் சார் இல்லையென்றால் என்னால் டப்பிங் பேசியிருக்கவே முடியாது.
நடிகர் கமல்:
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் படம் பார்க்கிறவர்கள் மொத்தம் 14 கோடி பேர் இருக்கிறார்கள். 2 மொழி ரசிகர்களையும் தூங்காவனம் திருப்தி செய்யும்.
2 மொழிகளிலும் படம் செய்வது சுலபம் அல்ல. நான் ஏற்கனவே இதுபோல் 2 மொழிகளில் 24 படங்களில் நடித்திருந்தாலும் எப்படி சுலபமாக படம் செய்வது என்பதை இந்த படத்தில் கற்றுக் கொண்டேன்.
ஒரு படத்தை தயாரிப்பது சுலபம். அதில் திட்டமிடுதலும் திறமையுடன் செயல்படுவதும் தான் முக்கியம். அதற்கு நல்ல ஆட்கள் தேவை. இந்த படத்தில் எனக்கு அப்படி ஒரு நல்ல அணி அமைந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் இனிமேல் வேகம், உத்வேகத்துடன் நிறைய படங்களை தயாரிக்கும்.