மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனைப் பற்றிய புத்தகம் அமெரிக்காவில் வெளிவர இருக்கிறது.
1992,1996 மற்றும் 2000ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர் சூசி பேவர் ஹாமில்டன்(47). உடல் நலக் குறைவு காரணமாக, வெற்றி வாய்ப்பை இழந்த அவர், திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
இவர், லாஸ் வேகாஸ் நகரில் எஸ்கார்ட் எனப்படும் மறைமுக விபசாரத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், அதில் ஒரு மணி நேரத்திற்கு 1200 அமெரிக்க டாலர்களை சம்பாதிப்பதாகவும் அமெரிக்க பிரபல இணையதளம் ஒன்று, ஆதாரங்களுடன் 2012ம் ஆண்டு ஒரு செய்தி வெளியிட்டது. இதனை ஒப்புக்கொண்ட ஹாமில்டன், தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படி கூறினார்.
என் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி மற்றும் விரக்தியின் காரணமாகவே இந்த தவறான பாதையில் சென்றேன். இது மிகப்பெரிய தவறு என்று தெரிந்தும் இதை செய்தேன். என்னை இந்த தொழிலில் ஈடுபட யாரும் கட்டாயப்படுத்தவில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு.
என் செய்கையின் மூலம் மனம் புண் பட்டவர்களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்றே தெரியவில்லை. எனது குடும்பத்தாரின் அன்பை பெற நான் திருந்த வேண்டும் என நினைக்கிறேன். ஒரு நல்ல தாயாக, மனைவியாக, மகளாக, தோழியாக எனது உறவுகளை புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறேன். என்று குறிப்பிட்டிருந்தார்.
தனது அனுபவங்களை “வேகமான பெண்(Fast Girl)” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார்.
மிகவும் சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இப்புத்தகம் அமெரிக்காவில் விரைவில் வெளிவர இருக்கிறது.