மாணவர்கள் இரவில் என்ன படங்களை பார்க்கிறார்களோ அதை தானும் பார்ப்பதாக மஹாராஷ்டிரா அமைச்சர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிரா அமைச்சரவையில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் கிரிஷ் பபட் என்பவர் தான் சர்ச்சையில் சிக்கியவர்.
கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற மாணவர் கருத்தரங்கில் கலந்து கொண்ட கிரிஷ், "இரவில் மாணவர்கள் தங்கள் செல்போன்களில் என்ன படங்களை பார்க்கிறார்களோ அதையே நானும் பார்க்கிறேன். உடல் தோற்றத்தில் நான் வயோதிகனாக இருந்தாலும் மனதளவில் நான் இளைஞன்" என்று தெரிவித்தார்.
மாணவர்கள் இரவில் ஆபாசப் படம் பார்ப்பதாகவும் அதனை தானும் பார்ப்பதாகவும் மறைமுகமாக கிரிஷ் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் பா.ஜ.க. அமைச்சர் கிரிஷ் பபட்டின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பபட்டின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவசேனா தலைவர் நீலம் கோரே கூறுகையில், "கலாச்சார நகரான புனேயில் பபட் இவ்வாறு பேசியிருப்பது துயரமானது"என்று தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த கிரிஷ், " இது நகைச்சுவைக்காக கூறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இத்தகைய பேச்சு குறித்து சட்டக் கல்லூரி மாணவர் யோகேஷ் காம்தி அளித்த புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.