சிலி நாட்டில் 8.3 ஆக பதிவான அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 227 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலாபெல் பகுதியில் நேற்று (புதன்) இரவு அடுத்தடுத்து 3 முறை நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தின் தாக்கம் தலைநகர் சாண்டியாகோ மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 8.3ஆக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நில நடுக்கத்தால்,சிலியின் அண்டை நாடுகளான மெக்சிக்கோ,பெரு மற்றும் ஹவாய் போன்ற நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கடலோரங்களில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு மத்திய சிலிப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 500 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 2500 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.