லாரி ஏற்றி 6 பேரை கொலை செய்த வழக்கில் 2 பேரை காவல் துரையினர் கைது செய்துள்ளனர். மேலும், 9 பேரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி ஆட்டோ மீது லாரி மோதியதில் கற்குடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பசாமி, அடிவெட்டி, மகேஷ் மற்றும் முருகன், இசக்கியம்மாள், கனகு ஆகிய 6 பேர் இறந்தனர். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான லாரி டிரைவர் திருமலைக்குமார் செங்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து செங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆட்டோ டிரைவர் கருப்பசாமி, அடிவெட்டி, மகேஷ் ஆகிய 3பேர் திட்டமிட்டே லாரியை ஏற்றி கொலை செய்யப்பட்டதும், அப்பாவிகளான முருகன், இசக்கியம்மாள், கனகு ஆகிய 3பேர் இறந்ததும் தற்போது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து திருமலை குமாரை கைது செய்தனர். மேலும் திருமலை குமாருக்கு உடந்தையாக இருந்த செங்கோட்டையை அடுத்த கற்குடி கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் கோட்டூர் சாமி (30), திருமலையாண்டி மகன் சாமிதுரை (33) ஆகிய 2 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது லாரி டிரைவரான திருமலைக்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், ”கற்குடியில் இருந்து ஆட்டோ புறப்பட்டது முதல் செல்போனில் எனக்கு எனது ஆதரவாளர்கள் தகவல் கொடுத்து கொண்டே இருந்தார்கள்.
புளியறை நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது புதூர் என்ற இடத்தில் லாரியை வேகமாக ஓட்டி ஆட்டோ மீது மோதினேன். இதில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது. பின்னர் ஆட்டோவில் இருந்த அனைவரும் இறந்து விட்டதை உறுதி செய்த பின்னர் நாங்கள் 3 பேரும் லாரியில் இருந்து கீழே குதித்து எனது கூட்டாளிகள் கொண்டு வந்த வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
கைதான கோர்ட்டூர் சாமி, சாமிதுரை ஆகிய இருவரும் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேரை பிடிக்க ஏ.எஸ்.பி. அரவிந்தன் தலைமையில் 2தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.